Lion and Mouse
சிங்கமும் எலியும்
ஒரு பெரிய காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அந்த சிங்கம் மிகவும் களைப்புற்று இருந்ததால் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தது. அப்பொழுது அந்த வழியாக சென்ற எலி தூங்கிக் கொண்டு இருந்த சிங்கத்தின் மீது ஏறி இறங்கி விளையாடிக் கொண்டு இருந்தது. எலியின் விளையாட்டால் சிங்கத்தின் தூக்கம் குழம்பி விட்டது. இதனால் மிகவும் கோபம் கொண்ட சிங்கம் கர்ச்சித்த வண்ணம் தனது காலை எலியின் மீது வைத்து நசுக்கியது. அப்போது பயந்த எலி சிங்கத்தை நோக்கி "ராஜா என்னை மன்னித்து விடுங்கள் என்னை கொன்று விடாதீர்கள் எப்போதாவது உங்களிற்கு என்னால் முயன்ற உதவியை கண்டிப்பாக செய்வேன்" என்று கெஞ்சியது. மனம் இரங்கிய சிங்கம் "'இனிமேல் இவ்வாறு செய்யாதே"எனக் கூறி எலியை விடுவித்தது. எலியும் நன்றி கூறி அவ் இடத்தை விட்டு அகன்றது. ஒரு நாள் வேடர்கள் காட்டில் நுழைந்தார்கள். அவர்கள் சிங்கத்தை பிடித்து விட்டார்கள். சிங்கத்தை மரமொன்றில் கட்டி விட்டு அதை மிருகக்காட்சிச்சாலைக்கு கொண்டு செல்வதற்காக ஆட்களை கூட்டி வர சென்றார்கள். சிங்கமோ அலறிய வண்ணம் வலையினுள் இடப்பட்டு கட்டி விடப்பட்டு இருந்தது. அந்த வழியாக வந்த எலிக்கு சிங்கத்தின் அலறல் கேட்டது. உடனே அவ்விடம் வந்த எலி தனது கூர்மையான பற்களை கொண்டு வலையை கடித்து சிங்கத்தை காப்பாற்றியது.
படிப்பினை - நாம் செய்யும் ஒவ்வொரு உதவிக்கும் கைம்மாறு உண்டு.