The Rat and the Pigeon
எலியும் புறாக்கூட்டமும்
ஓர் ஊரில் ஒரு பெரிய நெல்வயல் காணப்பட்டது. அவ் வயலிலுள்ள நெற்கதிர்களை நாள் தோறும் புறாக்கூட்டம் ஒன்று வந்து உண்ட வண்ணம் இருந்தது. இதனை அறிந்த வயல் உரிமையாளர் புறாக்களை பிடிப்பதற்காக வலையை வயலில் விரித்தான். இதனை அறியாத புறாக்கள் வலையின் மீது அமர்ந்தன. அமர்ந்த பின்னரே அங்கு வலை இருப்பதை உணர்ந்தன. வலையில் இருந்து விடுபட ஒவ்வொரு புறாவும் முயற்சித்தும் முடியவில்லை. அப்போது வலையில் இருந்த தலைவன் புறா ஏனைய புறாக்களை நோக்கி "அனைவரும் ஒரே நேரத்தில் சிறகை அடிப்போம். அவ்வாறு செய்தால் மாத்திரமே நம்மால் பறக்க முடியும். அப்படியே பறந்து நம் எலி நண்பன் வீட்டிற்கு செல்வோம்.அவன் நமக்கு உதவுவான்" என கூறியது. அனைத்து புறாவும் அதனை ஏற்றுக் கொண்டு ஒரே நேரத்தில் சிறகை அடித்துப் பறந்தன. தலைவன் கூறியது போலவே வலையுடன் எலியின் வீட்டை நோக்கி பறந்தன. எலியின் வீட்டை அடைந்த புறாக்கூட்டம் எலியிடம் உதவி கேட்க எலியும் அவற்றின் கால்களை சுற்றி இருந்த வலையை கூர்மையான பற்களை கொண்டு அறுத்துப் போட்டது. உடனே புறாக்கூட்டம் எலிக்கு நன்றி கூறி அவ்விடம் விட்டு அகன்றன.
படிப்பினை - ஒற்றுமையே பலம்